Sunday, 29 July 2012

கடவுள் இருக்கான் கொமாரு!!

ஒருவாரம் முன்பு நண்பனுடைய கடைக்குச்சென்றிருந்தேன்.சிறிதுநேரம் பேசிக்கொண்டு இருந்தோம்.அப்பொழுதுதான் அந்த கேரக்டர்கள் எண்ட்ரி ஆயின.

வெள்ளை வேட்டி, உடலை போர்த்திய இன்னொரு வெள்ளை வேட்டி(கொஞ்சம் பெரிய்ய்ய்ய துண்டுதான்) ஒரே மாதிரியான கெட்டப்பில் நுழைந்தனர் மூன்று பேர்.

வந்தவுடனே ”பெரியவாள்ளாம் வந்திருக்கா “நான் இன்னும் யார் வருகிறார்கள் என்று வெளியே எட்டிப்பார்த்தேன்.யாருமில்லை. சுய அறிமுகமாம்.

அடுத்து மூன்று பேருமே ஒரே சமயத்தில் மந்திரத்தை ஓத ஆரம்பித்தார்கள்.

ஓதி முடித்தவுடன் ”மூணு பேர் இருக்கோம் பாத்து எதாவது செய்யுங்கோ”

நண்பன் முடிந்தவரை விரட்டிப்பார்த்தான்.ம்ஹூம் நகரும் வழி காணோம்.

நண்பனோட அப்பா வந்தவர்களை வியாபார நேரத்தில் நிறுத்திவைக்க பிரியப்படாமல் பத்து ரூபாய் குடுத்து அனுப்புடா என்றார்.

”எங்களுக்கு பணம் வேண்டாம் .மூணு பேருக்கும் சாப்பாடு வாங்கி கொடுங்க உங்க கையால, நன்னா இருப்பீங்க”

கடைசியில் பேரம் படிந்து 50ரூ ”தானமாக” பெற்றுச்சென்றனர்.

அப்பொழுதுவந்த இன்னொரு நண்பன் சொன்னான் இந்த மாதிரி தமிழகமெங்கும் கிளை பரப்பி மந்திரம் ஓதிக்கிட்டு இருக்கிறார்களாம்.

அது சரி ஒரு குரூப்பாத்தான் அலையுறாங்க போல என்று நினைத்துக்கொண்டேன்.

உதயகீதம் என்ற படத்தில் கவுண்டர் மரத்துக்கு மரம் உண்டியல் வைத்து ஆன்மீகம் வளர்த்த காட்சி ஏனோ நினைவுக்கு வந்தது.

ஒரு மூன்று நாட்கள் கழித்து அதே கெட்டப் வேறு மந்திரம் வேறு இருவர்.
இம்முறை எங்கள் அலுவலகத்துக்கு.

அடேய்ய்ய்ய்ய்ய்ய்!!!

அவர்களைத்துரத்தி அனுப்பிய ஒரு மணி நேரத்தில் இரு பெண்களும் ஒரு ஆணும் உள்ளே நுழைந்தனர்.கையில்ஒரே ஒரு பிட் நோட்டீஸ்.

“பக்கத்தூரு முருகன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்யுறோம்,ஏதோ உங்களால ஆன பண உதவி செய்யனும்”

இந்த கடவுள் எத்தனை பேரை வாழவைத்துக்கொண்டிருக்கிறான்!!!
...

...

...


Wednesday, 25 July 2012

ஒரு சுற்றுலா குறிப்பு

இது ஒரு சுற்றுலா குறிப்பு.

அப்பல்லாம் சுற்றுலான்னு சொன்னா குடும்பத்தோட கோவில் கோவிலா கூட்டிக்கிட்டு போவாங்க..

அது மாதிரியில்லாம காலேஜ் முடிச்சவுடனே ஃபிரண்ட்ஸ் எல்லோரும் லீவுக்கு எங்கயாவது முதல்முறையா தனியா(குடும்பத்தோட இல்லாம) போலாம்னு முடிவு செஞ்சோம்.

கொடைக்கானல் போகலாம்னு ஏக மனதா தீர்மானிச்சு கிளம்பிட்டோம் ஒரு படையா..

பஸ்ல போனாத்தான் ஊர் உலகம் பத்தி தெரியும் நாலு மனுஷங்களப்பாத்து பழகலாம்னு அதுலயே போனோம்...(சரி சரி காறித்துப்பாதீங்க அப்போ அம்புட்டுதான் வசதி)

சேலத்துல இருந்து  பஸ் ஏறுறதுக்கு முன்னாடி சாப்பிட்டு விட்டு ஏறிக்கலாம்னு பஸ் ஸ்டாண்ட் முன்னாடி இருந்த ஹோட்டல்ல சாப்பிட்டோம் ..பஸ் ஸ்டாண்ட் வந்தவுடனே 2 பேரு ஆளையே காணோம் ..எல்லாம் ஹோட்டல் மகிமை ..ஒருவழியா வந்தார்கள் சென்றவர்கள் ..

விடியல்காலையில் போய்  இறங்கினோம்..

ஒவ்வொருத்தனும் புதிய வானம் புதிய பூமின்னு பாடமட்டும்தான் செய்யல..அவ்ளோ பெருமை மூஞ்சி பூரா வழிஞ்சது...

தங்குறதுக்கு அலைஞ்சோம் பாருங்க என்ன காரணமோ ரூமே கிடைக்கல ..

கடைசியா ஒரு புண்ணிய ஆத்மா ரூம் கொடுத்தாரு...அதை அறைன்னு சொல்றதவிட பாதாளக்கிடங்குன்னு சொல்லியிருக்கலாம் .. கட்டில்கள் இருந்துச்சு  பரவாயில்லை ...

பாத்ரூம் போன நண்பன் போன உடனே சத்தமா பாட ஆரம்பிச்சான்..

ஏண்டான்னு கேட்டா தாழ்ப்பாள் இல்லையாம் கதவுக்கு ..

மனச தேத்திக்கிட்டு ஒவ்வொருத்தரா பாடி கூவி முடிச்சுட்டு வெளிய ஊர் சுத்திட்டு வந்தோம்..

ஊர் என்னவோ அழகாத்தான் இருந்தது...முட்டாய்கடைக்காரன் பட்டிக்காட்டானைப்பாத்தா மாதிரி சுத்தோ சுத்துன்னு சுத்தி பாத்தோம் 

ராத்திரி சாப்பாடு அங்கேயே ஆர்டர் பண்ணோம்..சப்பாத்திக்கு தொட்டுக்க என்ன வேணும்னு கேட்டு எழுதுனப்பவே உஜாராயிருக்கனும் எங்கூரு கடையில புரோட்டாவுக்கு குழம்பை கட்டி அடிக்கிற மாதிரி கலந்து கட்டினோம் பில் வந்தப்புறம் உய்யலாலா எல்லாம் நொந்தலாலா ஆயிட்டோம் குழம்புக்கு தனிக்காசுன்னு அப்பதான் முதல்முறையா கேள்விப்பட்டோம்...அவ்வ்வ்வ்வ்

பொறவென்ன அடுத்த நாள் சிக்கனமா செலவு பண்ணி ஊருக்கு கிளம்பிட்டோம்..

பழனிக்கு போயி நட்ட நடு ராத்திரியில் ஆட்டோஸ்டாண்ட் பின்னாடி இருந்த சாக்கடையில் நிம்மதியா உச்சா கூட போக முடியாம ஆளாளுக்கு துரத்த நெம்ப அவஸ்தையில் இருந்தவன் அடிவாங்குனாலும் பரவாயில்லன்னு அதை சாதிக்கன்னு ஒரு இரவில்தான் எத்தனை அல்லல்கள்..

அந்த நேரத்துக்கு பஸ்களும் இல்லாம ஒரே குஷ்டமப்பா...

 பிறகு கொடுமுடி கரூர்ன்னு ரூட்டு தெரியாம பஸ் ஏறி இறங்கி வெந்தசாமிகள் ஆயிட்டோம்...

அப்புறம்  ஒரு நியூஸ்பேப்பர் வேன்காரன்கிட்ட பேசி வண்டியில அடைச்சுக்கிட்டு வந்து ஒருவழியா சேலம் வந்து சேர்ந்தோம்...


எல்லோர் வீட்டிலும் எப்படி இருந்துச்சு டூர்ன்னு கேட்டப்ப சூப்பர்னுதான் சொன்னோம் வேற வழி..
ஒரு திட்டமிடல் இல்லாது ஆலோசனை கேட்கவும் மனம் இல்லாமல் அலட்டலில் போய்வந்த முதல் உலா அது.ஆனாலும் இப்போ நினைச்சாலும் கசக்கவில்லை..
..
..
..


Thursday, 19 July 2012

நியதிகள் !!

நியதிகளைக்கட்டிக்கொண்டு அழும் உலகம் இது!

காலக்கிரமத்தின் வார்ப்பெடுப்பில் உள்ளீடுகளைத்தொலைத்து சக்கையாய் போய்விடுவன நியதிகள்!ஆனாலும் அதையும் விடாமல் பல ஜீவன்கள் பற்றிக்கொண்டுதான் வாழ்கின்றன.அப்பற்றே வாழ்தலின் முகாந்திரமாய் அமைந்துவிடுகிறது அவர்களுக்கு!அத்தகைய ஒரு ஜீவன் "ஆதாமின்ட மகன் அபு"


வாழ்நாளின் ஒரே நோக்கமாய் அவர் இதயத்தை துளைத்து வீற்றிருப்பது ஹஜ் யாத்திரை..குதிரைக்கேற்ற கடிவாளமாய் அவர் மனைவி ஆயிசும்மா.. சர்க்கரை இல்லாத கடுங்காப்பியின் கசப்பு நாக்கில் நிற்பதுபோல் நிராதவராய் விட்டுசென்ற மகன் மீதான இயலாக்கோபம் மனதில் கசப்பூற நிலைத்து நிற்கிறது..

ஹஜ் யாத்திரை தன் முதலும் இறுதியுமான யாத்திரையாகவே பாவிக்கிறார்..
அதற்காகப் பசியையும் வயதையும் எதிர்த்து நடத்துகிறார் வாழ்க்கை...

பழைய படங்களின் பாதிப்போ என்னவோ இந்த யாத்திரை நிமித்தம் அபு சந்திக்கும் பலரில் யாரேனும் ஒருவர் அவரை ஏமாற்றிவிடுவார் என்றெண்ணி ஏமாந்தேன்..

கோட்பாடுகளில் ஊறி நேர்படவே ஊர்ந்துக்கொண்டிருக்கும் அபுவுக்கு அவ்வப்போது யதார்த்த நிலையினை எடுத்துகூறும் சகோதரனாக டீக்கடை ஹைதர்..

இழப்போ பிரிவோ ஏதோ ஒன்று அன்பு என்னும் இழையை மேலும் பத்திரப்படுத்தி உறவுகளை வலுக்கச்செய்கிறது ..

அவ்வகையில் அபு தன் யாத்திரைக்கு முன் பிணக்குகள் தோன்றிய ஓர் உறவுக்கு அன்பு பூச்சு பூசுகிறார்.

மனிதர்கள் ஏமாற்றவில்லை ஆனால் யாத்திரைக்காக அவர் விற்ற பலாமரம் அவரை ஏமாற்றிவிடுகிறது..

உதவிகள் நீண்டாலும் நீர்த்துப்போகாமல் பிடித்து வைத்திருக்கும் நியதிகளை இழப்பதில்லை அபு..

மீண்டும் கனவு மீண்டும் பசி மீண்டும் ஒரு நம்பிக்கை என மறுபடியும் துவங்குகிறது அபுவின் வாழ்தல்..

...
...
...
...
...
...
...
அட இன்னும் நிறைவு பெறவில்லை மக்களே
 என்முந்தைய பதிவுக்கு அமோக ஆதரவளித்த அன்புள்ளங்களுக்கு நன்றிகள் உரித்தாகுக ...
..
..

Monday, 16 July 2012

உப்பும் உறைப்பும்!

என்னுடைய கடந்த சில இரவுகளை மிகுதியாத்தின்றது திரைப்படங்கள்!

பெரும்பாலும் தியேட்டருக்கு குடும்பத்துடன் சென்று மட்டுமே திரைக்காவியங்களைக்கண்டு களித்து வந்த நான் ட்விட்டரால் டோரண்ட்டுக்கு அறிமுகம்+அடிமை ஆனேன்.


அப்படி என்னை ஈர்த்த ஓரிரு மலையாளத்திரைப்படங்களைப்பற்றி சொல்லலாம் என இருக்கிறேன்.


அவற்றை நீங்கள் (ஒத்தையா இந்த பதிவை பயமில்லாம படிக்கிறவரே உங்களைத்தான்) கண்டு களித்து காறித்துப்பி விமர்சனங்களில் திளைத்திருக்கலாம் இருந்தாலும் எனக்கும் சமூக பிரஞை என ஒன்று உள்ளதல்லவா???

என் நினைவில் தூங்கும்  வண்ணச்சிதறல்களை கலைடாஸ்கோப்பும் சிறு முயற்சி மட்டுமே!!


டிஸ்கி:என்னடா எப்பவுமே செய்யுறத எல்லாத்தையும் செஞ்சுட்டு கடைசியா பாதிரியார்கிட்ட பாவமன்னிப்பு கேக்குறமாதிரிதானே எல்லோரும் இதை எழுதுவாங்க இவன் இப்பவே இதை சொல்றானேன்னு நினைக்காதீங்க இது சிகரெட் அட்டையில் எழுதுவதைப்போல ஒரு பம்மாத்து எச்சரிக்கை அதாகப்பட்டது" நான் எதையும் அலட்சியத்துடன் அசட்டையுடன் அசிரத்தையுடன் கடப்பவன் எனவே டெக்னிக்கலாக அதிகமாக எதிர்பார்த்திட வேண்டாம்"

பின்ன என்ன ஹேருக்கு எழுதுறேன்னு திட்டக்கூடாது 
மீ பாவம் ஜஸ்ட் ஃபார் ஜட்டி....

SALT N PEPPER முதலில் இதைப்பற்றி


இளமையை விட்டு விலகியும் முதுமை தொட்டுவிடாமல் அவதியுறும் மத்திமவயது காதல்தான் களம்!

உணவு ! அண்ணாச்சி இது ஆசையில்ல பசின்னு பசித்தவன் சொல்லுவான்! இதையே ஆசையாகக் கொண்டு உயிர்தரித்திருப்பவன் நம் நாயகன்! உணவுப்பிரியன்!பெண் பார்க்கச்சென்ற இடத்தில் அதைவிட்டு அங்குள்ள அருமையான சமையல்காரனை வேலைக்கு அமர்த்திக்கொண்டு அழைத்துச்செல்லும் அளவு சமையல்கலையின் உன்னத ரசிகன்!!நாமும் நல்ல ருசி எது வக்கனையாக அலைந்து திரிந்து நாக்கை திருப்தி படுத்துவதில்லையா?! அதில் இவன் தீவிரவாதி! அது என்னவோ முதல் காட்சியில் புளியம்பழத்தைத்தின்னும்போது எல்லோரையும் போல எனக்கும் நாவில் ஊறியது எச்சில் ஏக்கத்தோடு!


நாயகி முதிர்கன்னி,டப்பிங் ஆர்ட்டிஸ்ட், நாயகன் அளவு இல்லையென்றாலும் உணவுக்கு நல்லதொரு ரசிகை!

ஒரு ராங் கால் ,ஒரு தோசை(thattil kutti dosai) இவைதான் இருவரையும் சண்டையோடு அறிமுகப்படுத்தி வைக்கின்றன.சிறுதயக்கம் தடுமாற்றங்களுக்குப்பின் தொடரும் அலைபேசி உரையாடல்கள் தோழமைக்கான கண்ணிகளைக்கோர்க்கின்றன.

மறுபடியும் இவ்வுரையாடல்களின்போது "Joan's Rainbow" கேக் செய்முறை நாக்கை சப்புக்கொட்ட வைக்கிறது.

பிறகு வழமை போல நேரில் காண விழைதல்,ஏதோவொரு தயக்கத்தில் இருவரும் செல்லாமல் இளையவர்களை ஆள்மாற்றி அனுப்புதல்,அவர்களுக்குள் காதல் கிளைவிடுதல் என நம்மை இட்டுசெல்கிறது படம்.பிறகு இறுதிக்காட்சியில் உண்மை உடைபடுவதும் இரு ஜோடிகள் இணைவதும் எல்லாம் வழக்கம் போலவே!!!

நேரில் சந்திக்காமல் பரிதவிக்கும் காட்சிகள் சொல்கின்றன காதல் எவ்வயதில் வந்தாலும் காதல்தான்.

படத்தில் என்னை ஈர்த்தவை ...

தன் பழைய காதலிக்காக தன் தொல்லியில் அகழ்வாராய்ச்சி இடத்தை அவர் செல்லும் இடத்துக்கெல்லாம் மாற்றிச்செல்லும் நாயகனின் சக அலுவலர்!

சமையலோடு தோழமையும் பரிமாறும் சமையல்காரர்!

மத்திம வயது அவஸ்தைகளை எரிச்சலை வெளிப்படுத்திய நாயகன்,நாயகி!

இவை எல்லாவற்றுக்கும் மேலாக 
.
.
.
.
.
.
.
.
அடுத்து "ஆதாமின்ட மகன் அபு"

பயம் வேண்டாம் அடுத்த பதிவில்தான்