Monday, 27 June 2011

கடிகாரமுள்

அந்த அடுக்குமாடிகுடியிருப்பின் முதல்தளத்தின்
4ம் நம்பர் வீடு ஆரவாரத்துடன் இருந்தது.


இரண்டு சிறுவர்களும் இரண்டு பதின்வயதுபெண்களும்
தொலைக்காட்சியில் மூழ்கி இருந்தனர்.


சோஃபாவில் நிரம்பிவழிந்துகொண்டு சூடான தேனீரும்
அவ்வப்பொழுது முந்திரிபக்கோடாவும் வயிற்றுக்குள்
தள்ளிக்கொண்டிருந்தனர் ராஜனும் ராகவனும்.


இரு தனி இருக்கைகளை அவர்களின் 
தர்மபத்தினிகள் அலங்கரித்தனர்.


அவர்களின் பேச்சு பல தளங்களை விழுங்கி  
 பேரமைதிக்குத்திரும்பியது.


இத்தனை ஆரவாரங்களையும் கவனித்துக்கொண்டிருந்த
இரு விழிகள் கடிகாரமுள் மீது மோதிக்கொண்டிருந்தது. 


இப்பொழுது கிரிக்கெட் டைம். 


அத்தனை கண்களும் தொலைக்காட்சியில் தொலைந்துபோயின.


மீண்டும் அந்த விழிகள் ஊசலாட்டத்துடன் 
கடிகாரமுள்ளுடன் மோதியது.
"சீக்கிரம் ஓடு"


ஆயிற்று..கிரிக்கெட்டும் இடைவேளைக்கு வந்தது.


இப்பொழுது அனைவரும் தம் கடிகாரமுள்மீது 
பார்வை செலுத்திக்கொண்டே எழுந்தனர்.


தனியறையில் இருந்த அந்த வற்றியதேகத்தின்முன் நின்றனர்.


"அப்பா நாங்க கிளம்புறோம்.ஒரு பத்து நாளைக்குள் 
 வரப்பார்க்கிறோம்.ஆளுக்கொரு மூலையில் இருக்கிறோம்.
 பசங்க ஸ்கூல்வசதிய பார்க்கவேண்டியிருக்கு."


இவர்களின் பேச்சை கேட்டுக்கொள்ளாத விழிகள் தளர்வாய் மூடிக்கொண்டது.


வீடே நிசப்தமானது.


சிறிது நேரத்தில் அந்த இளவயதுபெண் அறைக்குள் நுழைந்தாள்.


அந்த விழிகள் விரிந்தன.


உதவிக்காக நியமிக்கப்பட்ட அவள் வந்தவுடன் அவருக்கு
தோசைகள் வார்த்து அன்று ஆஸ்பிட்டலில் நடந்த கூத்துகளை, 
பஸ்ஸில் ஒரு ஸ்கூல்பையன் மறதியில் பஸ்பாஸ் கொண்டுவராமல்
முழிக்க கண்டக்டர் டென்ஷனானது என கதைகள் பேசிக்கொண்டே 
சாப்பிடவைத்தாள்.மருந்துகளும் திணித்தாள்.அவருக்கு மிகவும்பிடித்த
பொன்னியின் செல்வனை வாசித்துக்காட்டினாள்.


இப்பொழுதும் அந்தவிழிகள் கடிகாரமுள்ளிடம் மோதிய்து.
"மெதுவாகப்போ"
..
..


Wednesday, 15 June 2011

ஆனந்தி

.

முன்குறிப்பு:அவர்கள் இப்பொழுது மஹாராஷ்ட்ராவின் ஒரு நடுத்தர நகரத்தில் வசித்து வருகின்றனர்.
வெளிச்சம் கற்பழிக்காத இருண்டசாலையில் அவள் நடந்துக்கொண்டிருந்தாள்.தூரத்தில் பயங்கரமாகக்காட்சியளித்த
மஞ்சள் ஒளியைத்தொட்டுவிடக்கூடாது என்பதுப்போல மிகவும் மெதுவான நடையில் போய்க்கொண்டிருந்தாள்.

எத்தனை மெதுவாக நடந்தாலும் ஏதோ ஒரு முடிவை எட்டித்தானே ஆகவேண்டும்.இலக்கற்று போய்க்கொண்டிருந்த
ஆனந்தி இப்போது அந்த கிளைச்சாலையினுள் நுழைந்தாள்.சென்ட்ரலை ஒட்டிய அந்த சாலையில் ஒரு டீக்கடை
சுறுசுறுப்பாகத்துவங்கியது.விபூதிக்கு நடுவில் சிறிது நெற்றியைக்காட்டியவாறு சென்ற ரிக்சாவண்டியோட்டி அவளை
வெறித்துப்பார்த்தபடியே கடந்தான்.

இதோ அவள் சென்ட்ரலுக்குள் நுழைந்தாள்.தூக்கம் சுமந்த கண்களுடன் சோகையாய் அமர்ந்திருந்த பெண்போலீஸைத்தாண்டி
சுற்றும்முற்றும் பார்த்தவாறே சென்று ஒரு ஒதுக்குப்புறமாக உட்கார்ந்தாள்.இரண்டு சிறுவர்களுடன் துள்ளிக்கொண்டிருந்த
நாய்க்குட்டி இவளருகேவந்து முகர்ந்துப்பார்த்தது.பின் என்ன நினைத்ததோ அருகிலேயே உட்கார்ந்துக்கொண்டது.

"பிளாக்கி கமான் பிளாக்கி"

ம்ஹூம் கருவாச்சி நகர்வதாக இல்லை.

சிறிது நேரத்தில் சிறுவர்களுடன் வந்த நடுத்தரவயதினன் கருவாச்சியைத்தூக்கிச்சென்றான்.வழியனுப்ப வந்தவர்கள் போல.

அப்பொழுதுதான் அவள் கவனித்தாள்.வெகுநேரமாக அவளையே குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருந்த அந்த வாலிபனை.
அது ராமகிருஷ்ணன்.அவளுடன் பள்ளியில் படித்தவன்.

பார்த்துக்கொண்டிருந்தவன் இப்பொழுது அவளை நோக்கி வந்தான்.ஆனந்தி வெகுவேகமாக வெளியே செல்ல எத்தனித்தாள்.
ஆனால் ராமகிருஷ்ணன் அவளை நெருங்கிவிட்டான்.

"நீ ...நீங்கள்...."

"நான் ஆனந்தி.முன்பு ஆனந்தன்"
இருவரும் ஒரு தனிமையான இடத்தை தெரிவு செய்து அமர்ந்தனர்.

ஆனந்தி சொல்லத்தொடங்கினாள்.

நானும் வீட்டுக்கு ஒத்தை ஆண்பிள்ளையா சந்தோஷமா இருந்தேன். எனக்குள்ள அந்த மாற்றம் தெரியவரைக்கும்.அது நான் எட்டாவது
படிக்கும்போது ஆரம்பிச்சது.எல்லோருக்கும் இருக்கிற மாதிரி பாலுறவு பத்தின ஏக்கம் வெறி கனவுகள் என்னையும் அலைக்கழிச்சது.ஒரு
சங்கடமான விஷயம் என்னன்னா எனக்கு கனவுல வந்தது ஆம்பளைங்க.நாள்பட நாள்பட எனக்குள்ள பெண்தன்மை ஒட்டிக்க ஆரம்பிச்சிடிச்சு.
ஏற்கனவே பருத்த உடம்பு எனக்கு.எனக்குள்ள வந்த மாற்றத்தை பாண்டிப்பய ஸ்கூல்பூராவும் பரப்பிவிட்டுட்டான்.வாத்திகள் சிலர் அசிங்கமா
பேசி அசிங்கமா தொடுறது சீண்டுறதுன்னு இம்சைப்படுத்துனாங்க.

கொஞ்ச நாள் கழிச்சு அம்மாவ ஸ்கூலுக்கு வரச்சொல்லி டி.ஸி. கொடுத்துட்டாங்க.அம்மா அவுங்க கால்ல விழுந்து கும்பிட்டும் ஒத்துகிடல.

அதுக்கப்புறம் ஒரே ரூம்லதான் முடங்கிக்கிடந்தேன்.

அந்த ரணம் என்னை முழுசா கொல்றதுக்கு முன்னாடி நாமளே செத்துடலாம்னுதான் வீட்டவிட்டு வெளிய ஓடினேன்.

என்ன மாதிரியான ஒரு ஜீவனப்பாத்திருக்காட்டி நான் நினைச்சத முடிச்சிருப்பேன்.

அவங்க என்னைய பாம்பேவுக்கு கூட்டிக்கிட்டுப்போனாங்க.


சில மாதங்கள் கழித்து ஆனந்தியாக ஊர் திரும்பியவள் மிகுந்த ஆவலுடன் வீட்டுக்குச்சென்றாள்.

அவள் வீதியில் நுழையும்பொழுதே வீட்டில் ஒரு ஆரவாரம் இருப்பதை உணர்ந்தாள்.

அவள் காம்பௌண்ட் சுவரில் ஒண்டி உள்ளே எட்டிப்பார்த்தாள்.

எதற்காகவோ வெளியில் வந்த அம்மாதான் இவளைப்பார்த்தாள்.

வந்து கட்டியணைத்து அழுவாள் என்ற எதிர்ப்பார்ப்புக்கு மாறாக சங்கடமாக உள்ளே எட்டிப்பார்த்துக்கொண்டே அவளை பின்பக்கமாக இழுத்துச்சென்றாள்.

"தங்கச்சிக்கு கல்யாணம்.தயவு செஞ்சு போயிடு"

முகத்தில் அடித்த அந்த வார்த்தைகளின் வெக்கை தாளாது சுவற்றில் சாய்ந்தாள்.

அம்மா மாப்பிளைவீட்டாரிடம் பேசியது காதில் விழுந்தது.

"ஒரே பையன்தான்..அவனும் வெளிநாட்டுக்குப்போய் சம்பாதிக்கிறேன்னு போயி ஆக்சிடெண்ட்ல போய் சேர்ந்துட்டான்."

அம்மா இப்போ அழுதது செத்துப்போனவனை நினைத்து என்று எல்லோரும் கண்கலங்கினர்.

கால்போனபோக்கில் போய்க்கொண்டிருந்த ஆனந்தி சென்ட்ரலுக்குள் நுழைந்தாள்.

..

..


Monday, 6 June 2011

நல்லா சொல்றாங்கையா டீடேய்லு!!!நம்ம முத்தமிழ் அறிஞர் கலைஞர் நேத்தைக்கு
ஒரு உருக்கமான அறிக்கை வெளியிட்டார்.

"நம்மை அடிமைப்படுத்திவைத்திருந்த ஆங்கிலேயர்
கட்டிய புனிதஜார்ஜ்கோட்டையிலேயே எவ்வளவு
காலத்திற்கு சட்டப்பேரவையை நடத்துவது என்பதற்காகவே
புதியகட்டிடம் கட்டப்பட்டது."

காந்தியை பின்பற்றி அன்னியப்பொருட்களை தவிர்க்க
சொல்பவரைப்பார்த்து ஆளாளுக்கு குத்தம் சொன்னா எப்படி?

இனிமேல் ஆங்கிலேயர் கண்டுப்பிடிப்புகளை நாம தவிர்க்கணும்

அப்படி என்ன பொருட்கள்???
                                                        ???
                                                         ???                                                       ???
                                                       ???


 

மத்த எதுக்கும் உங்களுக்கு விளக்கம் தேவைப்படாது

கடைசி ஐட்டம் என்னன்னா

வயாகிரா AndrewBell,DavidBrown,NicholasTerrett
ஆகியோரால் உலகிற்கு பரிசளிக்கப்பட்டது..

..

..