Monday, 27 June 2011

கடிகாரமுள்





அந்த அடுக்குமாடிகுடியிருப்பின் முதல்தளத்தின்
4ம் நம்பர் வீடு ஆரவாரத்துடன் இருந்தது.


இரண்டு சிறுவர்களும் இரண்டு பதின்வயதுபெண்களும்
தொலைக்காட்சியில் மூழ்கி இருந்தனர்.


சோஃபாவில் நிரம்பிவழிந்துகொண்டு சூடான தேனீரும்
அவ்வப்பொழுது முந்திரிபக்கோடாவும் வயிற்றுக்குள்
தள்ளிக்கொண்டிருந்தனர் ராஜனும் ராகவனும்.


இரு தனி இருக்கைகளை அவர்களின் 
தர்மபத்தினிகள் அலங்கரித்தனர்.


அவர்களின் பேச்சு பல தளங்களை விழுங்கி  
 பேரமைதிக்குத்திரும்பியது.


இத்தனை ஆரவாரங்களையும் கவனித்துக்கொண்டிருந்த
இரு விழிகள் கடிகாரமுள் மீது மோதிக்கொண்டிருந்தது. 


இப்பொழுது கிரிக்கெட் டைம். 


அத்தனை கண்களும் தொலைக்காட்சியில் தொலைந்துபோயின.


மீண்டும் அந்த விழிகள் ஊசலாட்டத்துடன் 
கடிகாரமுள்ளுடன் மோதியது.
"சீக்கிரம் ஓடு"


ஆயிற்று..கிரிக்கெட்டும் இடைவேளைக்கு வந்தது.


இப்பொழுது அனைவரும் தம் கடிகாரமுள்மீது 
பார்வை செலுத்திக்கொண்டே எழுந்தனர்.


தனியறையில் இருந்த அந்த வற்றியதேகத்தின்முன் நின்றனர்.


"அப்பா நாங்க கிளம்புறோம்.ஒரு பத்து நாளைக்குள் 
 வரப்பார்க்கிறோம்.ஆளுக்கொரு மூலையில் இருக்கிறோம்.
 பசங்க ஸ்கூல்வசதிய பார்க்கவேண்டியிருக்கு."


இவர்களின் பேச்சை கேட்டுக்கொள்ளாத விழிகள் தளர்வாய் மூடிக்கொண்டது.


வீடே நிசப்தமானது.


சிறிது நேரத்தில் அந்த இளவயதுபெண் அறைக்குள் நுழைந்தாள்.


அந்த விழிகள் விரிந்தன.


உதவிக்காக நியமிக்கப்பட்ட அவள் வந்தவுடன் அவருக்கு
தோசைகள் வார்த்து அன்று ஆஸ்பிட்டலில் நடந்த கூத்துகளை, 
பஸ்ஸில் ஒரு ஸ்கூல்பையன் மறதியில் பஸ்பாஸ் கொண்டுவராமல்
முழிக்க கண்டக்டர் டென்ஷனானது என கதைகள் பேசிக்கொண்டே 
சாப்பிடவைத்தாள்.மருந்துகளும் திணித்தாள்.அவருக்கு மிகவும்பிடித்த
பொன்னியின் செல்வனை வாசித்துக்காட்டினாள்.


இப்பொழுதும் அந்தவிழிகள் கடிகாரமுள்ளிடம் மோதிய்து.
"மெதுவாகப்போ"
..
..


2 comments:

  1. கருத்தைச் சிதைக்காத தலைப்பு.

    :)

    ReplyDelete
  2. சூப்பர் பாஸ்...!! முதியவர்களின் நிலைமை கவலைக்குரியது..!! :(

    ReplyDelete