Sunday, 20 November 2011

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே

 சிக்குபுக்கு ரயில் வண்டி !

நீண்ட மலைப்பாம்பினைப்போல
இரையாக ஜனக்கூட்டத்தை விழுங்கியும்
துப்பியும் நிலம்கடக்கும் யந்திரன் !

காடு மலை குடைந்து இருட்டு குகையில்
சில சத்தங்களுடனும்  பல முத்தங்களுடனும்
கடக்கும் ஆரவாரம் அபாரம்!
ஆறுகளைக்கடக்கையில் வேண்டுதல்களையும்
சிற்பல சில்லறைகளையும் இறைத்துச்செல்லும்!


பெட்டியில் ஏதேனும் ஒரு குழந்தை
சிடுசிடு சிங்காரத்தை சிறுமுறுவல் சிங்காரமாக்கிவிடுகிறது!

படுக்கைகள் அறிந்திருக்கும் ஆயிரம் காதலையும்
சோகத்தையும்!

கதவுகள் கேட்டிருக்கும் காதல் ரகசியங்கள்!

முதல்நாள் விலகி இரண்டாம்நாள் பழகி
 இறுதியாக உறுதிப்பட்ட நட்புகள் கண்டிருக்கும்!


மௌனத்தில் கரைந்திட்ட வழியனுப்புதல்களில்
விழி கசியும் மொழிதனை பேசிச்செல்கிறது!


உலகத்தின் நீட்சியாய் நீண்டு செல்கிறது!